அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்ட இடத்தில் சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் "கங்கை நீரால் புனிதம் செய்கிறோம்" என்ற பெயரில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதைக் கண்டித்துக் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். ஆனால், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசின் தூண்டுதலால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ராகுல் காந்தி மீது ஹால்த்வானி சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக அநீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம்தாகூர் அறிவிப்பின்படி, மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி ஆலோசனையின்பேரில், நகரத் தலைவர் அருண்பாண்டியன் மற்றும் வட்டாரத் தலைவர் ரமேஷ்மூர்த்தி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐஎன்டியூசி மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜாசேகரன், மாவட்டச் செயலாளர் துரைராஜ், மாவட்ட நிர்வாகி ஆல்வார்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜாராம், எஸ்சி எஸ்டி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இப்போராட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் செல்லதுரை, விவசாயப் பிரிவுத் தலைவர் பேரையா, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் வேணுகோபால் உட்படக் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டு பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

