சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்துப் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் பாவூர்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து திருப்ப முடியாமல் இருக்கும் நகைகளை மீட்டுத் தரும் தொழிலையும் செய்து வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே சாமியாத்து பராக்கிரம பாண்டியபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (42) என்பவர் ராஜ்குமாரை அணுகி, பேய்க்குளம் தனியார் நிதி நிறுவனத்தில் தான் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அதனை நம்பிய ராஜ்குமார், ரூ. 4.14 லட்சம் செலுத்தி நகையை மீட்டு, முத்துராமலிங்கத்திடம் ரூ. 1.78 லட்சத்தைக் கொடுத்துவிட்டு நகைகளை வாங்கியுள்ளார். மேலும், முத்துராமலிங்கத்தின் நண்பரான முக்கூடலைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் 4 கிராம் மோதிரத்தை வாங்கி ரூ. 45 ஆயிரம் கொடுத்துள்ளார்.
தான் வாங்கிய 53 கிராம் நகைகளைத் தென்காசியில் உருக்கிப் பார்த்தபோது, அவை மாற்றுக்குறைந்த போலி நகைகள் என்பது ராஜ்குமாருக்குத் தெரியவந்தது. இதுகுறித்து முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
ஏற்கெனவே கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் பேய்க்குளம் நிதி நிறுவன ஆய்வின்போது, முத்துராமலிங்கம் அடகு வைத்த நகை போலி எனக் கண்டறியப்பட்டு அதைத் திருப்புமாறு அறிவுறுத்தப்பட்டும், அவர் நகையை மீட்காமல் ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் மருதுபாண்டியன் வழக்குப் பதிவு செய்து முத்துராமலிங்கத்தைக் கைது செய்தார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர்களான கார்த்திகேயன் மற்றும் மகேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

