பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் சபாரி வாகனத்தில் சென்று புலியை விரட்டியபடி 'ரீல்ஸ்' வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அமைச்சர் வன்னியரசு மீது விசாரணை நடத்தக் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பின், அமைச்சர் வன்னியரசு முதுமலை மற்றும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்களில் சபாரி சென்றார். அவர் வனப்பகுதியில் டைரக்கிங் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.
அந்த வீடியோவில், அமைச்சர் வன்னியரசு மற்றும் அவரது குடும்பத்தினர், மசினகுடி கோட்டத் துணை இயக்குநர் வித்யாதர், வனச்சரகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மசினகுடி வனத்திற்குள் நுழைந்து வனத்துறை சபாரி வாகனத்தில் அமர்ந்து கொண்டும், புல்வெளிகளில் நடப்பதும், ஓடுவதும் என விதவிதமாக ரீல்ஸ் எடுத்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
புதர் மறைவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலியைப் பார்த்து அதனை விரட்டிச் சென்ற காட்சியும் இருந்தது. கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் அமைச்சர் வன்னியரசு சபாரி வாகனம் மூலம் யானைக்கு மிக அருகில் சென்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவால் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
கர்நாடக வனத்துறை அமைச்சர் எச்சரிக்கை:
பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்குப் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தக் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்துக் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், "தமிழக அமைச்சர் வன்னியரசு அமர்ந்து இருக்கிற சபாரி வாகனம் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகப் பதிவு எண் கொண்ட வாகனம் என்பது வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும்; அது சாதாரண நபர்கள் மட்டும் இன்றி அமைச்சர் உள்ளிட்ட எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் சட்ட விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான்.
இவ்விஷயத்தில் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் டிஜிபி சலீம் மற்றும் முதன்மை வனத்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். வனத்திற்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது" என்றார்.

