புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், ரூ.142.76 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உற்ச வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டை வந்தடைந்த அவருக்கு வழிநெடுகிலும் த.வெ.க. தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்த அவருக்குத் மாவட்ட ஆட்சியர் அருணா புத்தகம் கொடுத்து வரவேற்றதுடன், ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் ரூ.68.31 கோடி மதிப்பில் முடிவுற்ற 44 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. ரூ.11.72 கோடி மதிப்பில் 70 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.ரூ.62.73 கோடி மதிப்பில் 13,676 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தமாக ரூ.142.76 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்யிடம், தீபிகா என்ற மாற்றுத்திறனாளி பெண் செல்ஃபி எடுக்க விருப்பம் தெரிவித்தார். உடனே அவரிடம் இருந்த செல்போனை வாங்கித் தாமே செல்ஃபி எடுத்து அந்தப் பெண்ணுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். மேலும், விழா முடிந்து வெளியே வந்த அவரிடம் கோரிக்கை மனு அளிக்கக் காத்திருந்த பொதுமக்களிடமும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமும் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சாலை வழியாகப் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், அங்குப் பணியில் இருந்த பெண் நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அழைத்து அவர்களுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி ரூ.23¼ கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களுக்குக் கையசைத்தபடி 'ரோடுஷோ' சென்ற அவர், பின்னர் ரோஜா இல்லத்தில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார்.