பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 117 பயணிகள் மற்றும் 17 படகு ஊழியர்கள் உட்பட மொத்தம் 134 பேருடன் படகு ஒன்று பலாஹ்வன் மாகாணத்தின் கோரோன் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாகப் படகில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் படகில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், கடலில் தவித்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 87 பேரைக் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டுக் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

சுமார் 7,100 தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில், தீவுகளுக்கு இடையே மக்களையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்ல குறைந்த கட்டணம் கொண்ட படகுகளே முதன்மைப் போக்குவரத்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்நாட்டில் இதுபோன்ற படகு விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.