இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த காதலன் மற்றும் உதவி செய்வது போல் நடித்து மாணவியின் வாழ்க்கையைச் சீரழித்த மேலும் 3 பேர் உட்பட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வெள்ளிச்சந்தை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாயமான மாணவி ஒரு வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது பேரதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகின. மாணவி இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடந்தபோது, தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. ஆசை வார்த்தைகள் கூறி மாணவியைப் பூங்கா, கடற்கரை எனப் பல்வேறு இடங்களுக்கு அஜன் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் விடுதியில் அறை எடுத்து மாணவியைப் பலவந்தப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்த அஜன், அதனைத் தனது கைபேசியில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மீண்டும் தனிமைக்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதற்கு மாணவி மறுக்கவே, அந்த ஆபாச வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனால் வேதனையடைந்த மாணவி, தனது உறவினரான வேம்பனூரைச் சேர்ந்த விவேக் (32) என்பவரிடம் நடந்து முடிந்தது குறித்துக் கூறி கதறியுள்ளார்.
ஆனால், விவேக் மாணவிக்கு உதவுவது போல் நடித்து, அவரையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்துத் தனது நண்பரான பரப்புவிளையைச் சேர்ந்த தினேஷ் (29) என்பவரிடம் பெருமையாகக் கூறியுள்ளார்.
மாணவியின் பலவீனத்தை அறிந்துகொண்ட தினேஷ், "உனது பிரச்சனைகளை நான் தீர்த்து வைக்கிறேன்" எனக் கூறி மாணவியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். அவரை ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாரம் அடைத்து வைத்து, மது கொடுத்து மிரட்டிச் சீரழித்துள்ளார். மேலும், நாகர்கோவிலைச் சேர்ந்த தனது நண்பர் ஆன்றோ ஜெரிஷ் (24) என்பவரையும் அங்கே வரவழைத்து மாணவியைக் கொடூரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு வாரச் சித்திரவதைக்குப் பின் அங்ஙிருந்து தப்பி வந்த மாணவி, வீட்டில் நடந்தவற்றைக்கூறிக் கதறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் போலிஸார் மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் காதலன் அஜன், விவேக், தினேஷ் மற்றும் ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் காதலால் பிளஸ்-2 மாணவியின் வாழ்க்கை சீரழிந்த இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

