கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முழக்கத்தை முன்வைத்த திமுக, இப்போது வன்மம் மற்றும் வெறுப்பால் நிரம்பிக் கிடக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது" என்று திமுக நிர்வாகிகளின் அண்மைய பேச்சுகளுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா எம்பி மற்றும் திமுக நிர்வாகி சேகர்பாபு ஆகியோரின் அண்மைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகிய இருவரின் உரைகளைக் கேட்டால் அவர்களின் ஆற்றாமை நன்கு புரியும்.

'எனக்குச் சந்தேகம் இருக்கு, நீ யாருக்குப் பிறந்த?' என்று மேடையில் கேட்பது பெண்களைக் கடுமையாக இழிவுபடுத்துவது ஆகாதா? அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா அந்த இழிவான கேள்வியை எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலைகவிழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தார்.

முதல்வரை (விஜய்) 'ஓடுகாலி' எனச் சேகர்பாபு மேடையில் உளறியதை, 'பீப்' ஒலி போட்டு அந்த அவமானத்தை மறைக்க முயற்சி செய்கிறது கலைஞர் தொலைக்காட்சி. முன்பு திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி குறித்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானும் மிக இழிவாகப் பேசியபோது முதல் ஆளாகக் குரல் கொடுத்துக் கண்டித்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

ஆனால், இப்போது திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான கலாச்சார உரையை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படிப் பேசுவதற்கு 'பாஜக ஆ.ராசா, திமுக எச்.ராஜா' என அழைப்பதில் என்ன வித்தியாசம் இருக்கிறது?" என்று வன்னி அரசு தனது பதிவில் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.