தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டியை அடுத்த குருக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பொன்ராஜ் (40). இவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் மீனா என்பவருடன் பொன்ராஜுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், மீண்டும் அங்கிருந்த காவலர் குடியிருப்பு அருகே வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பொன்ராஜ், பெண் என்றும் பாராமல் மீனாவைத் தாக்கி அவதூறாகப் பேசியுள்ளார். இது குறித்துக் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் மீனா, உடனடியாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கிறிஸ்டி விசாரணை நடத்தி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொன்ராஜைக் கைது செய்தார். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்குள் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸைத் தலைமை காவலர் தாக்கி கைதான சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட தலைமை காவலர் பொன்ராஜைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொன்ராஜ் எதற்காக மீனாவைத் தாக்கினார்? தனிப்பட்ட விரோதமா? அல்லது பணி செய்யும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதமா? என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

