தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் "விதைப்பந்து தயாரித்தெறிதல்" இயக்கம் மிகவும் பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் ஒரே நாளில் ஒன்று கூடி சுமார் 2 லட்சம் விதைப்பந்துகளைத் தயாரித்து வீசிய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

பூமி வெப்பமயமாதலுக்கு முக்கியத் தீர்வாக மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி பூ. திருமாறன் விதைப்பந்து எனும் பசுமை ஆயுதத்தைத் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பிரபலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய டீன் எஸ். ராஜகுமார் மற்றும் விதைப்பந்துப் பிரச்சாரகர் பூ. திருமாறன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பல்கலைக்கழக மாணவ-மாணவியரை விதைப்பந்து தயாரிப்பில் முழுமையாக ஈடுபடுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது முன்னாள் டீன் செண்பக விநாயகமூர்த்தி மற்றும் பசுமை ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.

விதைப்பந்துகள் தயாரிக்கும் பணிகளுக்கு முன்னதாக, அதுகுறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்துவதற்கும், தயாரிப்புப் பணிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைப்பதற்கும் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உஷாவிற்கு டீன் ராஜகுமார் உத்தரவிட்டுள்ளார்.

விதைப்பந்துகள் தயாரித்து முடித்த பின் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படவுள்ள பாராட்டுச் சான்றிதழின் மாதிரியை, டீன் ராஜகுமாரிடம் பூ. திருமாறன் வழங்கிச் சிறப்பித்தார்.