சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பிரபல தொழில் அதிபரான ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள், சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழகம் தாண்டி தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப் புகாரின் அடிப்படையில் முக்கியக் குற்றவாளியான வீரமணி உட்பட இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறை தரப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 பெண் ஐ.பி.எஸ். (IPS) அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் அளிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் பிரத்யேக செல்போன் எண் (9345319676) வெளியிடப்பட்டு, தொடர்ந்து ரகசிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெம் வீரமணி மீது புதிதாக மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இப்புகார்களின் அடிப்படையில் வீரமணி மீது மீண்டும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்காகப் புழல் சிறையில் இருந்த ஜெம் வீரமணியைக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். முந்தைய விசாரணைகளின்போது காணொலிக் காட்சி (Video Conference) வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தற்போது முதன்முறையாக நேரில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.