பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு வேறு கொடூரத் தாக்குதல்களில் 25 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட ஜியாரத் மற்றும் சுரப் ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களுக்குப் ‘பலுசிஸ்தான் விடுதலைப் படை’ (அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது.
மேலும், இத்தாக்குதல் தொடர்பான 1 நிமிடம் 11 வினாடிகள் கொண்ட அதிர்ச்சி வீடியோ ஒன்றையும் பலுசிஸ்தான் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் தீப்பற்றி எரிவதும், அதன் அருகே ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நிற்பதும், சாலையில் ராணுவ வீரர்களின் உடல்கள் கிடப்பது போன்ற கொடூரக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சமீப நாட்களாகப் பலுசிஸ்தான் பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் காவல் படைகளைக் குறிவைத்து பலுசி ஆயுதக் குழுக்கள் நடத்தும் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
கடந்த மாதத்தில் மட்டும் பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட 36 தாக்குதல்களுக்குப் பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றிருந்தது. அதில் 33 வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
"பலுசிஸ்தானின் தேசிய விடுதலை இலக்கை அடையும் வரை பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்" என்றும் பலுசிஸ்தான் விடுதலைப் படை பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

