கரூர் அருகே டைல்ஸ் வியாபாரி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள சின்னகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (63). டைல்ஸ் வியாபாரியான இவர், கரூர் வெங்கமேடு கொங்கு நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் சின்னகாளிபாளையத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ராமசாமி, அவரது மனைவி ஜானகி (60), மகள் சுகுணா (35), பேத்தி சிவானி (10), பேரன் ஆதிரன் (4) ஆகிய 5 பேரும் சேலையால் உடல்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த வாங்கல் போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனிடையே, ராமசாமியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
அந்தக் கடிதத்தில், "எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை; இது நாங்கள் சுயமாக எடுத்துக்கொண்ட முடிவு" என எழுதப்பட்டிருந்தது. மேலும், தொழில் ரீதியான கொடுக்கல்-வாங்கல் விவரங்கள் மற்றும் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
மகளின் வாழ்க்கையால் விரக்தியா?
இது குறித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், "ராமசாமியின் மகள் சுகுணாவிற்கும், வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த பிரபுவிற்கும் திருமணமாகி சிவானி (5-ம் வகுப்பு), ஆதிரன் (எல்.கே.ஜி.) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ராமசாமி சென்று சமாதானம் செய்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கடந்த 15-ஆம் தேதி ஏற்பட்ட பிரச்சினையால் சுகுணா குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். மகளின் வாழ்க்கையை நினைத்து விரக்தியடைந்த ராமசாமி இந்தத் துயர முடிவை எடுத்திருக்கலாம்" எனத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

