தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 22.35 கோடியை ஆன்லைன் மூலம் சுருட்டிய வழக்கில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கணவன்-மனைவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இயங்கி வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 22.35 கோடியை ஆன்லைன் மோசடிக் கும்பல் சுருட்டியது. இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரகக் கண்காணிப்பாளர் ராம்பிரசாத், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.

காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மொத்தம் 46 பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 22 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 879 பணம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவ்வழக்கில் ஏற்கனவே முதற்கட்டமாக 7 பேரும், இரண்டாம் கட்டமாக 5 பேரும் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்தபா (44) மற்றும் அவரது மனைவி கமிலா எய்மன் (36) ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

கமிஷன் பணத்திற்காக இவர்கள் தங்களது வங்கிக் கணக்கை மோசடி நபர்கள் பயன்படுத்த உதவி செய்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் கைதானவர்களிடமிருந்து இதுவரை ரூ. 1.50 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலரைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடியை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டுள்ளதால், அவர்களைப் பிடிக்கவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.