கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த வேங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வெல்லா (69). இவர் முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரின் மனைவி பிந்து. இவர் தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், பிந்து, வெல்லாவிடம் தனது பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிகப் பலன்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய வெல்லா, ரூ.19 லட்சத்து 75 ஆயிரத்தைக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்து கொடுத்துள்ளார்.
பின்னர், குறிப்பிட்ட காலம் முடிந்ததும் முதலீடு செய்த பணத்தை வெல்லா திருப்பி கேட்டபோது, பிந்து பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இது குறித்து சந்தேகமடைந்த வெல்லா, சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
அப்போது, மேலாளர் பிந்து நிறுவனத்தின் பெயரில் போலியாகக் கடன் பத்திரம் தயாரித்துக் கொடுத்துப் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து வெல்லா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் பணம் மோசடி செய்த பைனான்ஸ் நிறுவன மேலாளர் பிந்து மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

