கூட்டுறவுத்துறையின் மூலம் நகர் பகுதிகளிலுள்ள 212 நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், , திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள டயோசீசன் கூட்டுறவு பண்டகசாலையில் இன்று (03.09.2026) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
ஆய்வில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தெரிவித்ததாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் அசாதாரண ஏற்றத் தாழ்வுகளின் போது உரிய சந்தைத் தலையீடு மேற்கொள்ளவும். அத்தகைய பொருட்கள் பொதுமக்களுக்கு அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக நியாயமான விலையில் போதுமான அளவில் கிடைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், வெளிச்சந்தையில் வெங்காயம் விலையில் காணப்படும் ஏற்றத்தாழ்வினை குறைக்கும் நோக்கில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வெங்காயத்தை கொள்முதல் செய்து விநியோகிப்பதற்காக, National Agricultural Cooperative Marketing Federation of India Ltd. (NAFED) National Cooperative Consumers' Federation of India Ltd. (NCCF) ஆகிய நிறுவனங்களுடன் உடனடியாக ஒருங்கிணைந்து, வெங்காயத்தை நேரடி கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற நகர்பகுதிகளிலுள்ள 212 முழுநேர நியாய விலைக்கடைகள் மூலம் முதற்கட்டமாக வரப்பெற்ற 30 மெட்ரிக் டன் (30,000 கிலோ) வெங்காயம் நியாயவிலைக்கடைகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற நியாய விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வட்டாரத்தில் 67 கடைகளிலும், பாளையங்கோட்டை வட்டாரத்தில் 38 கடைகளிலும், மானூர் வட்டாரத்தில் 8 கடைகளிலும், வள்ளியூர் வட்டாரத்தில் 15 கடைகளிலும், இராதாபுரம் வட்டாரத்தில் 4 கடைகளிலும், களக்காடு வட்டாரத்தில் 16 கடைகளிலும், நாங்குநேரி வட்டாரத்தில் 4 கடைகளிலும், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 30 கடைகளிலும், சேரன்மகாதேவி வட்டாரத்தில் 30 கடைகள் என மொத்தம் 212 முழுநேர நியாயவிலைக்கடைகளில் 30,000 கிலோ வெங்காயம் விற்பனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை கண்காணிக்க 5 துணைப்பதிவாளர்கள் தலைமையில் 36 கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் வெங்காயத்தினை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் , துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) மாரிஸ்வரன் , சரக துணைப்பதிவாளர் சுரேஷ் , கூட்டுறவு சார்பதிவாளர் வின்சென்ட் , சங்கர் சந்தானம் , நியாயவிலைக்கடை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

