நெல்லை டவுன் மாதா சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர பெருமாள் (47). இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் இட்லிக் கடை நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு, ராஜேந்திர பெருமாள் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் செல்போனுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜேந்திர பெருமாளை நேரில் அழைத்து எச்சரித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருப்பினும், காவல்துறையின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ராஜேந்திர பெருமாள் மீண்டும் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், தன்னுடைய விருப்பத்திற்குச் சம்மதிக்காததால் அந்தப் பெண்ணுக்கு மிரட்டலும் விடுத்து வந்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் அளித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராஜேந்திர பெருமாளைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

