நெல்லை அடுத்துள்ள தாழையூத்து அருகே உள்ள கீழத் தென்கலம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிதுரை மகன் ரூபன் பொன்ராஜ் (26). கட்டிடத் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்விஷயம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் தங்களது மகளைக் கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி ரூபன் பொன்ராஜிடம் பேசுவதைத் தவிர்த்து நிறுத்திவிட்டார். மாணவி பேசுவதை நிறுத்திய பிறகும், ரூபன் பொன்ராஜ் அம்மாணவி பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தித் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக பெற்றோர் நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் ரூபன் பொன்ராஜைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

