மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சியை தவெக ஆதரவாளர் என அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீது சென்னை பரங்கிமலை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் விஜய்யின் தமிக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆலந்தூர் வடக்கு மண்டல செயலாளர் நந்தகுமார் சார்பில் சென்னை பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: 'நான் எனது எக்ஸ் சமூக வலைதளத்தை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது சாட்டை துரைமுருகனின் வலைதள பக்கத்தில் நவம்பர் 14ம் தேதி ஒரு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோ 2 நிமிடம் 30 வினாடிகள் இருந்தது.

அதில் சாட்டை துரைமுருகன் ஆதாரங்கள் இன்றி தவெக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை குற்றம்சாட்டி உள்ளார். குறிப்பாக கடத்தல், போதைப்பொருள் தொடர்பான குற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புப்படுத்தி பேசி உள்ளார். அதுமட்டுமின்றி மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சிக்கும், தவெகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும் அவரை தவெகவுடன் தொடர்புப்படுத்தி பேசி உள்ளார். இதன்மூலம் தவெகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''என புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தூண்டுதல்), பிஎன்எஸ் 353 (1) (சி) (பொய்யான தகவல்களை சொல்லி ஒரு பிரிவினருக்கும், இன்னொரு பிரிவினருக்கும் பிரச்சனையை தூண்டுதல்), பிஎன்எஸ் 353 (2) (இருதரப்பினர் இடையே பகையை உண்டுபண்ணும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.