நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து பரப்பப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முகநூல் பக்கங்களில் காணொலி ஒன்று வெளியானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அக்காணொலியில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா உள்ளிட்டோரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த அவதூறு காணொலியைத் தொகுத்து வெளியிட்ட பெண் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தவும், காணொலியின் அசல் கோப்பு மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.