இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் கடல்சார் காற்றாலை திட்டத்தைத் தொடங்குவதற்காக ரூ.77 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கடந்த ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி, நாட்டின் மொத்த காற்றாலை திறனான 57,443 மெகாவாட்டில், 10,734 மெகாவாட்டிற்கும் அதிகமான திறனைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்கிறது.
தற்போது இத்துறையைக் கடலுக்குக் கொண்டு செல்லும் வகையில், தூத்துக்குடி உள் துறைமுகத்தின் தெற்கு அலைதடுப்புச் சுவரிலிருந்து சுமார் 1,650 மீட்டர் தொலைவில் 6.25 மெகாவாட் திறன் கொண்ட ஒரு காற்றாலை நிறுவப்படவுள்ளது.
ரூ.77 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியை 'இந்தியன் போர்ட் ரெயில் அண்ட் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட்' (IPRCL) கோரியுள்ளது. இந்த ஒப்பந்தமானது காற்றாலையின் வடிவமைப்பு, கொள்முதல், கட்டுமானம், நிறுவுதல், சோதனை மற்றும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருதல் ஆகியவற்றுடன் 2 ஆண்டுகளுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளையும் உள்ளடக்கியதாகும். இங்கிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மாநில மின்சாரத் தொகுப்பிற்கு அனுப்பப்படும்.
தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
தூத்துக்குடியில் சாதகமான கடல் காற்றாலை சூழல், நன்கு அமைக்கப்பட்ட துறைமுகக் கட்டமைப்பு மற்றும் கடல்சார் தளவாட உள்கட்டமைப்பு போன்றவை ஒருங்கே அமைந்துள்ளன. இது காற்றாலையை நிறுவுவது மட்டுமன்றி, கடலில் இயந்திரங்களை நிறுவி இயக்குவதற்கான பரந்த சூழலமைப்பைச் சோதித்துப் பார்க்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
ஜெர்மனியின் வடக்குக் கடல் பகுதியில் 'ஆல்பா வென்டஸ்' என்ற முதல் கடல்சார் காற்றாலைப் பண்ணை வெற்றிகரமாக மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருவதைப் போல, இந்தியாவில் அமையவுள்ள இத்திட்டம் எதிர்காலப் பெரிய கடல்சார் காற்றாலைத் திட்டங்களுக்குச் சிறந்த அடித்தளமாக அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

