தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்புக்குத் தேவையான கூடுதல் திறன்களையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக மர்காஷிஸ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தொழில்நுட்ப பயிலகம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பயிலகத்தின் தொடக்க விழாவுக்கு, பிள்ளையன்மனை சேகரத் தலைவர் குருவானவர் செல்வின் சார்லஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் வரவேற்புரையாற்றினார். தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல கல்லூரி கல்வி நிலவரக் குழு செயலர் ஜெபச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருமண்டல லே செயலரும் கல்லூரி செயலருமான எஸ்டிகே. ராஜன் ரிப்பன் வெட்டி பயிலகத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் அவர் பேசுகையில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களது பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்புக்கு தேவையான கூடுதல் திறன்களையும் கல்லூரிப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போன்ற திறன்கள் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த உதவும். இத்திறன்களை முறையாகப் பயன்படுத்தி வளர்த்துக் கொண்டால், கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் காலத்திலேயே அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டு, சமூகத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் திருமண்டல குருத்துவச் செயலர் குருவானவர் டிஜிஏ தாமஸ், நாசரேத் சேகர பொருளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி தாளாளர் மாமல்லன், புனித லூக்கா செவிலியர் கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் பூமி கிங்ஸ்லி சாலமோன், திருமறையூர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளித் தாளாளர் டேவின் சாலமோன், திருமண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்டீபன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் திலகர், சாமுவேல், தனசிங் மற்றும் கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய அமுதன் நன்றியுரை வழங்கினார். திருமண்டல துணைத் தலைவர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ் நிறைவு ஜெபம் செய்தார்.
இப்பயிலகத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் எஸ்டிகே ராஜன், கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் ஆலோசனையின் பேரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜாய் ஷோபினி, ஆரோக்கிய அமுதன், உறுப்பினர்கள் வின்சிலா எவாஞ்சலின், ஹேனா குளோரி, ஜோஸ்பின் ஜூலியட் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

