தூத்துக்குடி முத்துநகரைச் சேர்ந்தவர் காந்தி மகன் ஆறுமுகம் (45), இவர் அரசு நகர போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். மேலும், தூத்துக்குடியில் இருந்து ஏரல் செல்லும் மகளிர் பேருந்தில் பணியில் ஈடுபட்ட வந்த நிலையில், அவர் சமீபத்தில் வேறு பேருந்துக்கு பணி மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், இவர் பணியில் தாமதமாக செயல்பட்டதால் பேருந்து உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பள்ளி மாணவிகள் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கிளை மேலாளருக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த ஆறுமுகம் இன்று காலையில், போக்குவரத்துக் கழக பணிமனையில் வைத்து பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் தரப்பினர் கூறும்போது, "கிளை மேலாளர் நடத்துனர் ஆறுமுகத்திடம் மிகவும் கடுமையான வார்த்தையில் திட்டி இனிமேல் அந்தப் பேருந்தில் உனக்கு டூட்டி கிடையாது நான் கொடுக்கிற வண்டியில் தான் நீ பணி செய்ய வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

