தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காந்தாரியம்மன் கோவிலின் புரட்டாசி மாத திருவிழா கோலாகலக் குத்துவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாகலாபுரம் சிவன் கோவிலில் காப்புகட்டி விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்களின் பால்குடங்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நையாண்டி மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இத்திருவிழாவை முன்னிட்டு அக்னிச்சட்டி ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் நாகலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

