தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியான ஊத்து பகுதியில் 113 மி.மீ., நாலுமுக்கில் 105 மி.மீ. மழை பதிவானது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,451 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.75 அடியை எட்டியுள்ளது.
கடனாநதி அணை: நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து 65.10 அடியாகவும், நீர்வரத்து 219 கன அடியாகவும் உள்ளது.
ராமநதி அணை: நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து 58.50 அடியாகவும், நீர்வரத்து 72 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தணிந்ததையடுத்து, பழைய குற்றாலம் தவிர்த்து மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அருவி மற்றும் களக்காடு தலையணை ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய மழைப் பொழிவு விவரம் (மி.மீட்டரில்):
ஊத்து - 113, நாலுமுக்கு - 105, காக்காச்சி - 93, களக்காடு - 87, மாஞ்சோலை - 75, கடனா - 66, மூலைக்கரைப்பட்டி - 45, சேர்வலாறு & நாங்குநேரி - 44, பாபநாசம் - 40, மணிமுத்தாறு & ராமநதி - 36, நெல்லை - 25.

