காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட முயலும் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளைக் கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் சமீபத்திய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று புதுடெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: "காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகேதாட்டு அணைத் திட்டம், காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியிட்ட இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

மேகேதாட்டு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பக் கர்நாடக அரசு முயற்சிப்பது மிகுந்த கவலைக்குரியது. எனவே, கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத் துறை அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது குறித்து மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சருடனான சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், "மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கை தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சருடனான இந்தப் பேச்சுவார்த்தை தமிழகத்திற்குச் சாதகமாகவே அமைந்தது" என்றார்.