தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் நாமக்கல்லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கக் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கல்லூரி மாணவர்களிடையே வானவியல் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 10 மண்டலங்களில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல், குறும்படம், போஸ்டர் தயாரித்தல், அஸ்ட்ரானமி போட்டோகிராஃபி மற்றும் அஸ்ட்ரானமி கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு மாநில அளவிலான மாநாட்டில் பரிசுகளும், வானவியல் துறையில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தில் நெல்லை மண்டல அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திரளான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மாதவ பாரதி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, போஸ்டர் தயாரித்தல் பிரிவில் தங்களது சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். இவர்களது திறமையைப் பாராட்டி, நாமக்கல்லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில அளவிற்குத் தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டி கல்லூரி மாணவர்களை ஜாய் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜான் டி பிரிட்டோ, நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, மண்டலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன், துணைத் தலைவர் கமலா ராணி, பேராசிரியைகள் கற்பகவல்லி, ரத்தினா மற்றும் மாதிரிப் பள்ளி வானவியல் கல்வி ஒருங்கிணைப்பாளர் சாம் ஹரிஸ் உள்ளிட்ட பலர் நேரில் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

