இங்கிலாந்து வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட திடீர் கணினி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 65,000-க்கும் அதிகமான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தேசிய வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் (NATS) கணினி இயக்கத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக வான்வழிப் போக்குவரத்துச் சேவைகள் ஒட்டுமொத்தமாக முடங்கின.

இத்தொழில்நுட்பக் கோளாறால் ஹித்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட 15 முக்கிய விமான நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுபாதையில் நின்ற விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் உணவு மற்றும் போதிய வழிகாட்டுதலின்றித் தவித்தனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. ரையானேர் 50 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக 65,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.

மாலையில் இத்தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், விமானங்கள் அடுத்தடுத்து ரத்தானதன் தாக்கம் ஐரோப்பா முழுவதும் எதிரொலித்துள்ளது. இதனால் விமானச் சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.