தென்காசி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பொழிவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் குண்டாறு அணை மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட பிற முக்கிய அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. பெரும்பாலான குளங்களும் வறண்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
கடந்த சில நாட்களாகப் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதோடு, சாரல் இல்லாததால் வறண்ட காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாகக் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
வழக்கமாக வார விடுமுறை நாட்களில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். ஆனால், சீஸன் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் இன்று மிதமான அளவிலேயே பயணிகள் வருகை தந்திருந்தனர். அருவிகளில் தண்ணீர் குறைவாகக் கொட்டியபோதிலும், வெயிலின் தணிப்பிற்காகச் சுற்றுலாப் பயணிகள் குளிர்ந்த நீரில் நீராடிச் சென்றனர்.

