தமிழ்நாட்டின் முன்னணிப் பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றான குமுதம் குழுமம் சார்பில் 'குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி' (Kumudam Biz News Daily) எனும் புதிய வணிக தினசரி நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய நாளிதழ் தூத்துக்குடி உட்படத் தமிழகம் முழுவதிலும் உள்ள முன்னணிச் செய்தித் தாள் விற்பனையகங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

குமுதம் குழுமத்தின் சார்பில் ஏற்கனவே குமுதம் வார இதழ், குமுதம் சிநேகிதி, குமுதம் மண்வாசனை, குமுதம் மாலைமதி, குமுதம் பக்தி இதழ்கள் மற்றும் குமுதம் ஆன்லைன் டிவி போன்ற சேவைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தொழில் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலும், வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த புதிய 'குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி' நாளிதழ் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய நாளிதழ் அறிமுகம் குறித்துத் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள முருகன் ஸ்டோர் உரிமையாளர் சோனா கூறுகையில்: "வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் 'குமுதம் பிஸ் நியூஸ் டெய்லி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ள இப்பத்திரிகைக்கு முதல்நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாசகர்களும் வணிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்" எனத் தெரிவித்தார்.