கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் தொலைந்தது தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அன்ஷுல் நாகர், ஐ.பி.எஸ்., உத்தரவின்பேரில் சைபர் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு இடங்களில் இருந்த தொலைந்த செல்போன்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 250 செல்போன்களும் இன்று உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்தப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட சைபர் பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவலர் சுகின் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை சுமார் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பிலான 830 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முந்தைய ஆண்டுகளில், 2024ஆம் ஆண்டு ரூ.2.30 கோடி மதிப்பிலான 1,303 செல்போன்களும், 2025ஆம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பிலான 1,265 செல்போன்களும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செல்போன் தொலைந்தால் பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு காவல்துறையின் குடிமக்கள் சேவை இணையதளம் வாயிலாகவும் புகாரைப் பதிவு செய்யலாம். தொலைந்த செல்போனை முடக்குவதற்கு மத்திய அரசின் CEIR இணையதளத்தையும் பயன்படுத்தலாம் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.