கடல் அலைகளின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், கடலோர மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய தேசிய பெருங்கடல் தகவல்தொடர்பு மைய மையம் எச்சரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 45 கடலோரக் கிராமங்களை உள்ளடக்கிய கடல் பகுதிகளில் கடல் சீற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் 15 முதல் 19 வினாடிகள் இடைவெளியில், சுமார் 1.1 முதல் 1.3 மீட்டர் உயரம் வரை எழ வாய்ப்புள்ளது. மேலும் கடல் நீரோட்டத்தின் வேகம் நொடிக்கு 0.7 முதல் 0.8 மீட்டர் வரை அதிகரித்துச் சீற்றத்துடன் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் காரணமாகக் கடல் நீர் கரையோரக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் அபாயம் உள்ளதால், கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மீனவர்கள் அலைகளின் வேகம் மற்றும் நீரோட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். கடல் சீற்றம் தொடர்பாக வெளியாகும் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.