தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 10-ம் தேதி காளி பூஜையும், 11-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுரசம்ஹாரம் அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.
பக்தர்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்களுக்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கோவில் வளாகப் பகுதி, தற்காலிகப் பேருந்து நிலையங்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைப் பகுதி மற்றும் பக்தர்களுக்கான கூட்ட நெரிசல் மேலாண்மை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டுப் ஆய்வு செய்த அவர், பணிகளைத் தடையின்றி மேற்கொள்வது குறித்துத் துறை சார்ந்த போலீஸாருக்குப் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாயஜோஷ், திருச்செந்தூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார், போக்குவரத்து ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர்கள் முகேஷ் அரவிந்த், வேல்முருகன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

