தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வானில் கருமேகங்கள் திரண்டு மந்தமான வானிலையே நிலவி வந்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில், மதியம் 2.50 மணியளவில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

மதியம் 3.30 மணி வரை தொடர்ந்து 40 நிமிடங்களுக்கும் மேலாகப் பரவலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தக் திடீர் கனமழையினால் கோவில்பட்டியின் முக்கியப் பகுதிகளான எட்டயபுரம் சாலை, மந்தித்தோப்பு சாலை மற்றும் பிரதான சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

சாலையில் ஓடிய மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.

இருப்பினும், இந்தத் திடீர் மழையின் காரணமாகக் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்ப நிலை கணிசமாகக் குறைந்து இதமான குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மேலும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.