கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் இன்று (10.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கென சுற்றுலாத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடுக்கு அனுமதியளித்ததோடு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வேளாண்மைத்துறை அலுவலகம் மற்றும் பயன்பாட்டில் இல்லாத பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை சுற்றியுள்ள பகுதியில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டது.
தற்போது கையகப்படுத்தப்படவுள்ள வேளாண்மை துறை அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்திற்கு மாற்றாக முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புதிதாக அமைக்கப்படவுள்ள தற்காலிகாக நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வரும் போது கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கன்னியாகுமரி மண்டலக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காப்புக்காடு கிட்டங்கி I 4000 மெட்ரிக் டன் கொள்ளளவும், காப்புக்காடு கிட்டங்கி II 3400 மெட்ரிக் டன் கொள்ளவும் கொண்டது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும், அவற்றின் தரம் குறித்தும், கிட்டங்கில் சேமிக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளின் தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் எப்போதும் உயர்தரமானதாகவும், பூச்சிகள் அல்லது ஈரப்பதம் இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பொருட்களின் எடைக் குறைபாடுகள் ஏதும் இல்லாதவாறு துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு எடை குறைவாக அனுப்பபடுகிறது என கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், நியாயவிலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை எவ்விதத் தாமதமுமின்றி உடனுக்குடன் அனுப்பி வைத்திடவும் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மழைக்காலங்களில் தானிய மூட்டைகள் சேதமடையாதவாறு பாதுகாப்பான முறையில் அடுக்கப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டம் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வில் கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளர் காசிநாதன், வேளாண்மைத்துறை அலுவலர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

