தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஜெயபிரகாஷ் (51). இவர் தனது வீட்டின் முன்பகுதி கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயபிரகாஷ் தனது கடை முன்பாக நின்று கொண்டிருந்த போது, கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பொன்னுத்துரை என்பவர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார்.
தான் ஏற்கனவே வாங்கிச் சென்ற கறியில் எலும்பு அதிகமாக இருந்ததாகக் கூறி ஜெயபிரகாஷிடம் பொன்னுத்துரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பொன்னுத்துரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயபிரகாஷைக் கொடூரமாகத் தாக்கி, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த பொன்னுத்துரையை கைது செய்தனர்.

