கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில், மாவட்டத்திற்குட்பட்ட புத்தொழில் நிறுவனர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடனான “காஃபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மாணவர் தொழில்முனைவோர், தொழில் வளர் மையங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், ஒவ்வொரு புத்தொழில் நிறுவனரும் தங்களது தொழில் சார்ந்த புதுமையான தயாரிப்புகள், சேவைகள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர். மேலும், தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், புதிய தொழில் தொடங்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், நியாயமான தேவைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, நாகர்கோவிலைச் சேர்ந்த 'ஆலோ' (Aalo) என்ற புத்தொழில் நிறுவனத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட "Hire Kumari" என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளத்தை ஆட்சியர் அறிமுகப்படுத்தினார்.

இவ் இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்சியர் மு. பிரதாப் பேசியதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வணிக யோசனைகளை வெற்றிகரமான தொழில்களாக மாற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. அரசு வழங்கும் மானிய திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இளம் தொழில்முனைவோர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அரசுத் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளைக் கண்டறியும் வகையில் விரைவில் மாவட்ட அளவிலான 'ஹேக்கத்தான்' (Hackathon) போட்டி நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி உதவி ஆட்சியர் மோனிகா, மாவட்டத் திறன் மேம்பாட்டு அலுவலகக் கூடுதல் இயக்குநர் லட்சுமிகாந்தன், முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க இணைத் துணைத் தலைவர் ராகுல், வட்டார மைய அலுவலர் ஜிஜின் துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.