கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்டாலின் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, "என் மீது பரப்பப்படும் அவதூறுகள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படுபவை; விரைவில் மீண்டு வருவேன், மீண்டும் வருவேன்" என்று அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்டாலின் ஐபிஎஸ், திடீரெனக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்குப் பிரிவுத் துணைக்காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அன்ஷல் நாகர் ஐபிஎஸ் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம் தொடர்பாக எஸ்பி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: "கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த 20 மாதங்களாகக் குமரி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எனக்கு முழு ஆதரவு அளித்த பொதுமக்கள், காவல்துறையினர், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பரப்பப்படும் தகவல்களே தவிர, அதில் எவ்வித உண்மையும் இல்லை. இவை அனைத்திலிருந்தும் நான் நிச்சயம் மீண்டு வருவேன், மீண்டும் வருவேன்" என்று தெரிவித்துள்ளார்

பணியிட மாற்றத்தின் பின்னணி:

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாகப் பணியாற்றிய காலத்தில், கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு எதிராக எஸ்பி ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். கனிம வளக் கடத்தல் கும்பலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்ததன் எதிரொலியாகவே அவர் திடீரெனப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.