தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், முத்தையாபுரம் - திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை அருகே உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் இருந்து நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று வெளியே திரும்பியது.
அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், அவ்வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சுகுமார் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி பயங்கரமாகச் சரிந்து விழுந்தது. இதில் கன்டெய்னரின் அடியில் சிக்கிய சுகுமார், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் உடனடியாக இடத்திற்கு விரைந்து வந்து, சுகுமாரின உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

