கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் விவகாரத்தில் முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதைச் சாதிக்க நினைக்கிறார்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் சீமான் பதிவிட்டுள்ளதாவது: "கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பெண் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் த.வெ.க. ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக?

அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதைச் சாதிக்க நினைக்கிறார்?

கடந்த ஜூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுப் புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத் தரப்பு எதற்காகச் சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!

பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரென்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?" என சீமான் குறிப்பிட்டுள்ளார்.