சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்தியத் தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தமிழ்நாடு பிரிவு சார்பில் நடைபெற்ற மாநில வருடாந்திர உச்சி மாநாட்டில், தமிழ்நாடு பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் சூதப்பா சவுத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் முன்னிலையில் பேசிய அவர், பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துடன் மேற்கொண்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகப் பாராட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (நவம்பர் 21), அகில இந்தியத் தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தமிழ்நாடு பிரிவின் சார்பில் மாநில வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் அகில இந்தியத் தொழில் வல்லுநர்கள், அமைச்சர் விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராபர்ட் புரூஸ், பிரவீன் சக்கரவர்த்தி, கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் சூதப்பா சவுத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துடன் மேற்கொண்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி அடையும்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தகத்தில் இங்கிலாந்தின் 95 சதவீதப் பொருட்களும், இந்தியாவின் 90 சதவீதப் பொருட்களும் வரிச்சலுகை பெறும்" எனப் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசினார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் முன்னிலையில் பிரதமர் மோடியை இங்கிலாந்து தூதரக அதிகாரி புகழ்ந்து பேசிய இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.