தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இன்று காலை போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆபத்தான முறையில் பேருந்து படியில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று மீண்டும் இயங்கத் தொடங்கின. இதனால் கயத்தாறு பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 6:30 மணி முதல் 8:40 மணி வரை திருநெல்வேலி - கோவில்பட்டி மற்றும் கோவில்பட்டி - திருநெல்வேலி ஆகிய இரு வழித்தடங்களிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் திரண்டனர்.
ஆனால், வழக்கமாக வரக்கூடிய அரசுப் பேருந்துகள் வராமலும், போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாமலும் இருந்ததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.நேரத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் வந்த ஒருசில பேருந்துகளிலேயே ஏற முயன்றனர்.
இதன் காரணமாகப் பேருந்தின் படிக்கட்டுகளில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் மாணவர்கள் உயிருக்குப் பயந்தபடி ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணிக்கும் கொடூரம் நிகழ்ந்தது. இதில் உச்சக்கட்டமாக, கர்ப்பிணிப் பெண் ஒருவரும் நெரிசலில் வேறு வழியின்றிப் பேருந்து படியில் தொங்கியபடி பயணித்த காட்சி காண்போரைக் கலங்க வைத்தது.
கயத்தாறு பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் இந்தச் சீரற்ற பேருந்து சேவையால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, காலை வேளைகளில் நெல்லை - கோவில்பட்டி மார்க்கத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கயத்தாறு பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

