தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை விலைபேசும் கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய எம்.எல்.ஏ-க்களைத் திரும்பப் பெறும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன் கூறியதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மற்றும் தமிழக வீரர்கள் பதக்கங்கள் வென்றது பாராட்டுக்குரியது. விளையாட்டுத் துறையை மேம்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கி உள்கட்டமைப்பை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இடைத்தேர்தல் மக்கள் தீர்ப்பை அனைவரும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைபேசும் கலாசாரத்தைப் பாஜக தொடங்கிவைத்தது, தற்போது தமிழகம் வரை பரவிவிட்டது. இதுபோன்ற சூழலில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வை பதவியிலிருந்து திரும்பப் பெறும் அதிகார மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்."*
தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தனிநபர் தாக்குதல்களும், பெண்களைப் பற்றிக் கேலி பேசுவதும் அதிகமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். அரசியல் வெற்றிடம் நிலவுவதாலேயே உருவக் கேலி மற்றும் உடல்மொழியை வைத்துப் பேசும் போக்கு அதிகரித்துள்ளது என்றும், இது தமிழர் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்றும் சாடினார்.
மேலும், 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தேர்தல் ஆணையரைப் பற்றிப் பிரச்சாரத்தில் யாரும் பேசாதது ஜனநாயக படுகொலை எனக் குறிப்பிட்ட அவர், இதற்கு எதிராகத் தமிழக முதல்வர் வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தாமிரபரணி ஆற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது அனைவரது கடமை எனக் குறிப்பிட்ட அவர், கோவில்பட்டி நகர வளர்ச்சி சார்ந்த சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார். கோவில்பட்டி – இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணிகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும்.
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்களை நியமிப்பதோடு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கரும்பன், துணைச் செயலாளர்கள் பாலமுருகன், பாபு, நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

