ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மிக விரைவில் வெற்றி பெறும் என்றும், போர் முடிந்தவுடன் அமெரிக்காவில் பணவீக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுப் பெட்ரோல் விலை கடுமையாகக் குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது: "மோதலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்த மத்தியஸ்தர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஈரான் போரில் அமெரிக்கா மிக விரைவில் வெற்றி பெறப் போகிறது.

இப்போர் நிறைவடைந்தவுடன் அமெரிக்காவில் பணவீக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்; பெட்ரோல் விலையும் கடுமையாக வீழ்ச்சியடையும். ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கை, அமெரிக்காவிற்கு வரவிருந்த மிகப்பெரிய அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காகவே எடுக்கப்பட்ட முடிவாகும்."

"அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே நடக்கவிருந்த மிக மோசமான ஆபத்துகளில் ஒன்றைத் தடுப்பதற்காகவே நான் போரிடும் முடிவை எடுத்தேன். இப்போரை நான் தொடங்காமல் இருந்திருந்தால், இந்நேரம் இஸ்ரேல் என்ற நாடே முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியமே இருந்திருக்காது.

அதன் பிறகு ஈரானின் ராக்கெட்டுகளும் குண்டுகளும் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் நோக்கியும் வரத் தொடங்கியிருக்கும். அந்த பேரழிவை நான் முன்கூட்டியே தடுத்து நிறுத்தியுள்ளேன்.

"என்னைப் பொறுத்தவரை, நாம் வெற்றி பெறப் போகிறோம் என்பதில் மாற்றமில்லை. இது மிக விரைவாகவே முடிவுக்கு வரும். வரவிருக்கும் நவம்பர் மாத இடைத்தேர்தலுக்கு முன்னதாகவே ஈரானுக்கு எதிராக மேலும் சில அமெரிக்கத் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.