திருநெல்வேலி வள்ளியூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பணியில் இருந்த உதவி மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் செவிலியர்களை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாக வள்ளியூரைச் சேர்ந்த வீரமணி என்ற வீரமணிகண்டன் (28) மற்றும் ஜெயசீலன் ஆகிய இருவர் மீது வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் பழனி புலன் விசாரணை மேற்கொண்டு, வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (18.11.2026) இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து வீரமணி என்ற வீரமணிகண்டனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 294(b) பிரிவின் கீழ் 3 மாதங்கள் சிறை தண்டனையும், 353 பிரிவின் கீழ் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 506(1) பிரிவின் கீழ் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், இத்தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரான ஜெயசீலன் மீதான குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.