திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கும் நிகழ்வின்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காகப் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்களுக்குக் காவல்துறை சார்பில் தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை மதுரையைச் சேர்ந்த வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளர் அன்னலட்சுமி தலைமையிலான குழுவினர் அங்கு வந்தனர்.

அப்போது, 'சாதி அடையாளங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது' என்ற தடையைச் சுட்டிக்காட்டி, காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர், தங்களுக்கு மட்டும் காவல்துறையினர் கெடுபிடிகள் விதிப்பதாகக் கூறிப் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் வீரத்தமிழர் மக்கள் கழகத் தலைவர் பந்தல் ராஜா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது திடீரென முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கார் மீது செருப்பு வீசப்பட்டதால், அன்னலட்சுமி தரப்பினருக்கும், பந்தல் ராஜா தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் இரு தரப்பினரையும் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பியதுடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் பந்தல் ராஜா தரப்பினரை மாலை அணிவிக்க மணிமண்டபத்திற்குள் அனுமதித்தனர்.

பின்னர், ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பந்தல் ராஜா மற்றும் அன்னலட்சுமி தரப்பினரிடையே மீண்டும் மோதல் வெடித்தது. அப்போது ஒரு தரப்பினர் மணிமண்டபம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு பேரிகார்டுகளை மிதித்துத் தள்ளிவிட்டுக் கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, மாநகர காவல் துணை ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மணிமண்டபத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டது. மேலும், மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இதனிடையே, வ.உ.சி. மணிமண்டபத்திற்குள் அவரது சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளைப் போலீசார் கைப்பற்றினர். அதனை உள்ளே கொண்டு வந்தது யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.