நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என இந்தியா முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் டிம் செபர்ட் 2 ரன்களில் வெளியேறினாலும், பின் ஆலன் (40 ரன்கள்) மற்றும் டேரில் மிட்செல் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இணைந்த டேரில் மிட்செல் - பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தது. இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
டேரில் மிட்செல் 52 பந்துகளில் 89 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் 23 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். தொடக்கம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
பவர்பிளே முடிவிலேயே இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. முதல் விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்கள் (4 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியைத் தொடர்ந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றித் தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது.

