டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.
ஓமர்சாய் மற்றும் பரூக்கி வீசிய தொடக்க ஓவர்களில் அபிஷேக் சிக்சர்களைப் பறக்கவிட, முகமது நபி வீசிய 5-வது ஓவரில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் இணை சேர்ந்து 29 ரன்களைக் குவித்தது.
தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா, வெறும் 30 பந்துகளில் (11 சிக்சர்கள், 9 பவுண்டரிகள்) தனது சதத்தைப் பதிவு செய்து பிரமிக்க வைத்தார். முதலாவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா (108 ரன்கள், 34 பந்துகள்) ரஷித் கான் சுழலில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் (50 ரன்கள்) அரைசதம் கடந்து வெளியேறினார். திலக் வர்மா (2), ஷிவம் துபே (14), இஷான் கிஷன் (10), நிதிஷ் குமார் ரெட்டி (1) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (29) ஓரளவிற்கு ரன் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் இப்ராஹிம் ஜத்ரன் (25), ஓமர்சாய் (17) ஆகியோர் மட்டுமே ஓரளவிற்கு ரன் சேர்த்தனர்.
இந்திய தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தனர்.

சாதனைத் துளிகள்:
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் முதலிடம்: சர்வதேச டி-20 போட்டிகளில் அதிவேகமாகச் சதம் (30 பந்துகளில்) விளாசிய 'டெஸ்ட் அந்தஸ்து' பெற்ற நாடுகளின் வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார். (இதற்கு முன் சிக்கந்தர் ராசா - 33 பந்து, ஆலன் - 33 பந்து ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர்).
சர்வதேச அளவில் 3-வது இடம்: ஒட்டுமொத்த சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் சாஹில் சவுகான் (27 பந்து), முகமது பஹாத் (29 பந்து) ஆகியோருக்கு அடுத்தபடியாக அபிஷேக் சர்மா 3-வது இடத்தைப் பிடித்தார்.
இந்திய அளவில் முதலிடம்: சர்வதேச டி-20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை (35 பந்துகள்) அபிஷேக் சர்மா (30 பந்துகள்) முறியடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் 9000 ரன்கள்: இப்போட்டியின் மூலம் ஒட்டுமொத்த டி-20 போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்த மைல்கல்லைச் சஞ்சு சாம்சன் எட்டினார் (351 போட்டிகளில் 8 சதம், 56 அரைசதம் உட்பட 9,027 ரன்கள்).

