பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகாலச் சிறப்பான பொதுவாழ்க்கைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் ‘சேவா ஜோதி’ பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது.

இப்பேரணிக்கு பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் சக்திவேல் 'சேவா ஜோதி' தீபத்தை ஏந்தித் தலைமை தாங்கினார். பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசியக் கொடிகள் மற்றும் பாஜகவின் கட்சி கொடிக் கைகளை ஏந்திச் சென்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால சாதனைப் பயணத்தையும், மக்கள் நலத் திட்டங்களையும் விளக்கும் விழிப்புணர்வுப் பதாகைகளும் பேரணியில் அணிவகுத்து வந்தன.

பிரதமர் மோடியின் பொதுவாழ்க்கைச் சாதனைகளை மக்களுக்கு நினைவுபடுத்துவதுடன், சமூகச் சேவை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இப் பேரணி நடத்தப்பட்டதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், நாட்டின் 100-வது சுதந்திர ஆண்டான 2047-க்குள் இந்தியாவை முழுமையான வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான மத்திய அரசின் இலக்கிற்குப் பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது இப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

பேரணியில் பாஜக தேசியச் செயலாளர் மா. வெங்கடேசன், மீனவர் அணி மாநிலத் தலைவர் சீமா பாலு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஏ.எம். ராஜேஷ், ஆறுமுகம் செல்வராஜ், வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளர் வீரா, மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராமன், இசக்கிமுத்து, காளிராஜா, மாசானம், சண்முகசுந்தரம் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.