மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற 'பாரத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி'யின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: "சூரிய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகின் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் தற்போது 300 ஜிகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை இந்தியா அடையும்.
கடந்த 10 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை இந்தியா உருவாக்காமல் இருந்திருந்தால், உலகளவில் நிலவும் தற்போதைய சூழலில் இந்தியாவின் எரிசக்தி நெருக்கடி மிகவும் மோசமாக இருந்திருக்கும். மேற்கு ஆசியப் பதற்றம் உலகம் முழுவதும் எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து பல நாடுகளுக்குத் துயரங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உறுதியாக உள்ளது."
தொடர்ந்து பேசிய பிரதமர், "நிலையான அரசியல் மற்றும் தெளிவான கொள்கைகளால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது. இந்த பத்தாண்டின் இறுதியில் இத்துறையில் ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும். எனவே உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50 லட்சம் டன் உற்பத்தியை இலக்காகக் கொண்டு இந்தியா முன்னேறி வருவதாகவும், பசுமை எரிசக்தி வழித்தடத்தின் 2-ஆம் கட்டத்திற்காக அரசு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 44 ஆயிரம் அரசு கட்டிடங்களில் சூரிய மின்சக்தி இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் ஆண்டுக்கு ரூ.700 கோடி வரை சேமிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

