கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் மதுமிதா. இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 118 பவுன் தங்க நகைகள், விலைமதிப்பற்ற வைர நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பறிபோன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்துக் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டி விண்முட்டும் நிலையில், சிறு துளி நகை தொலைந்தாலே எவரும் வேதனையில் உறைந்து போவார்கள். ஆனால், 118 பவுன் நகையை இழந்துள்ள மதுமிதா, அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றித் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜாலியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
முன்பு பணத்தால் அபிஷேகம் செய்வதும், பணக் கட்டிலில் உருண்டு புரள்வதுமாக வீடியோ பதிவிட்டு வந்த அவர், இப்போதும் அதே பாணியில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இத் திருட்டு சம்பவத்திற்குப் பிறகு 'யார் இந்த மதுமிதா?' என்ற தேடல் இணையவாசிகளிடையே கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் சப்ஸ்கிரைபர்களும், ஃபாலோயர்களும் வேகமாக உயர்ந்து வருகின்றனர். அவரது பழைய வீடியோக்களும் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
வழக்கமாக வீடுகளில் திருட்டு நடந்தால் பொதுமக்கள் திருடர்களைத் திட்டிக் காவல் துறை உடனடியாகப் பிடிக்க வேண்டும் எனக் கோருவர். ஆனால், சமூக வலைதளங்களில் ஆடம்பரம் காட்டி வெறுப்பைச் சம்பாதித்த காரணத்தால், பல நெட்டிசன்கள் இச்சம்பவத்தில் கமெண்ட் பிரிவில் வித்தியாசமான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், தன் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள மதுமிதா, "நான் எனது சொந்தப் பணத்தைக் காட்டுகிறேன். விருப்பமிருந்தால் பாருங்கள், இல்லையென்றால் கடந்து செல்லுங்கள். தேவையின்றி என்னைப் பற்றித் தவறாகப் பேச வேண்டாம்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

